உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் வாடிகன் நகரின் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஐரோப்பாவில் வாடிகன் என்ற நகரில் கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் வசித்து வருகிறார். இவர் உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை மதகுரு ஆவார். இந்நிலையில் வாடிகன் நகர கார்டினல்கள் மற்றும் பாதிரியார்கள் ஆகியோர் குற்றம் செய்யாமல் இருப்பதற்காகவும், குற்றம் செய்பவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் வாடிகன் நகர சட்டத்தை சீர்திருத்தி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து கார்டினல்கள் மற்றும் பாதிரியார்கள் ஏதேனும் குற்றம் செய்திருந்தால் போப்பின் அனுமதியின் கீழ் வாடிகன் நகரத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யலாம் என போப் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து கார்டினல்கள் மற்றும் பாதிரியார்கள் 40யூரோக்களுக்கு மேல் உள்ள பரிசுப் பொருள்களை வாங்குவதற்கு தடை விதித்துள்ளார்.
இந்நிலையில் பாதிரியார்கள் எவரேனும் குற்றம் செய்திருந்தால் அவர்களின் அதிகாரம் பறிக்கப்படும் என்றும் இந்த விசாரணையை சிறப்பு வாடிகன் கிரிமினல் குற்றம் தீர்ப்பாயத்திற்கு மட்டுமே விசாரிக்க அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வாடிகன் நகரத்தில் உள்ள கார்டினல்களின் சொத்து விவரங்களை அறிவிக்கவேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் சட்டம் பிறப்பித்துள்ளார்.