கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் அமைந்த கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரும்.கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கினால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது இல்லை. அதனால் மனுக்களை பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளிலும் ,வாட்ஸ் அப்களிலும் அனுப்பி வைக்கின்றனர். மேலும் சிலர் கலெக்டரை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை இந்திரா நகர் 9வது தெருவை சேர்ந்த சூசைராஜ் மனைவி ஆரோக்கிய செல்வி தனது இரண்டு மகன்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
திடீரென ஆரோக்கிய செல்வி கலெக்டர் அலுவலகத்தின் வாசலில் கலெக்டர் கார் நிறுத்தும் இடத்தில் நின்று அவர் எடுத்து வந்த பையில் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தன் மீதும் தனது இரண்டு மகன்களின் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்ற காவல் துறையினர் ஓடிவந்து செல்விடமிருந்த மண்ணெண்ணை பாட்டிலை பிடுங்கி விட்டு அவர்களின் மீது தண்ணீர் ஊற்றினார். அதன் பிறகு அவர்களை காவல்துறை வாகனத்தில் தமிழ் பல்கலைக்கழக காவல்துறை நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களையும் மற்றும் அவர்கள் வைத்திருக்கும் உடமைகளையும் சோதனையிட்ட பிறகு அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்கிறார்கள்.
அவ்வாறு சோதனையிட்டும் ஆரோக்கிய செல்வி மண்ணெண்ணை பாட்டிலை உள்ளே எடுத்து வந்ததால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முன்பாகவே ஆரோக்கிய செல்வி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், “எனது கணவர் வெளியூர் சென்ற நிலையில் வீட்டிற்குள் மாதாக்கோட்டையை சேர்ந்த ஜார்ஜ் டேவிட் மற்றும் சிலர் நுழைந்தனர். வீட்டில் நுழைந்து கேமரா மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து, எங்களையும் வீட்டைவிட்டு வெளியேற்றினர் . இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்ததும் அவர்கள் வந்து பார்த்தனர். பின்பு நாங்கள் வீட்டிற்குள் சென்றபோது வீட்டில் இருந்த 22 பவுன் நகைகள்,பணம், செல்போன் ஆகியவற்றை அவர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
அதோடு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் சேதப்படுத்தி உள்ளனர்.இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜார்ஜ் டேவீட்டுக்கும் எனக்கும் இடையே சொத்து தகராறு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. இந்த நிலையில் வீடு புகுந்து இதுபோன்ற சம்பவம் நேர்ந்தால் நாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றோம் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டும் சூழல் உருவாகியுள்ளது. எனவே காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் ” என ஆரோக்கிய செல்வி கூறுகின்றார்.