அமெரிக்காவில் இளவரசர் ஹரி – மேகன் மாளிகைக்குள் நபர் ஒருவர் அத்து மீறி நுழைய முயற்சி செய்ததாக டிஎம்எஸ் வலைத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த தம்பதிகள் இளவரசர் ஹரி – மேகன். இவர்கள் அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்பு அமெரிக்காவில் சொந்த மாளிகை வாங்கி வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த தம்பதிகள் நேர்காணல் நிகழ்ச்சிக்காக பேட்டி அளித்தபோது தனக்கு பாதுகாப்பு இல்லாதது மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாகும் என்பதை இளவரசர் ஹரி வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அரச குடும்பம் தன்னை நிதி ரீதியாக கைவிட்டதால், பாதுகாப்பிற்கு போதுமான பணம் இல்லாத காரணத்தால் நெட்பிலிக்ஸ் மற்றும் ஸ்போட்டிபைய் நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று அவர்களின் மாளிகைக்குள் நிக்கோலஸ் ப்ரூக்ஸ் (37 வயது) என்ற நபர் அத்துமீறி நுழைய முயன்றதாகவும், அவரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியதாகவும் அமெரிக்காவின் டிஎம்எஸ் வலைத்தளம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி அதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அந்த நபர் திரும்பவும் மாளிகைக்குள் நுழைய முயன்ற போது காவல்துறையினர் அவரின் மீது அத்துமீறி நுழைய முயன்ற குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது. இந்நிலையில் அந்த நபர் எதற்காக மாளிகைக்குள் நுழைய முயன்றார்? என்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் இந்த பிரச்சனை அமைதியாக கையாள வேண்டும் என்று இளவரசர் ஹரி மேகன் முடிவு செய்துள்ளனர்.