யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த புலிகள் காப்பகத்தில் 10- க்கும் மேற்பட்ட வனசரகங்கள் உள்ளது. இங்கு யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இந்த வனவிலங்குகள் அருகில் இருக்கும் தொட்டகாஜனூர் கிராமத்தில் அமைந்துள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. அதேபோல் நேற்று அதே பகுதியில் அமைந்துள்ள விவசாயியான மல்லப்பா என்பவரது தோட்டத்திற்குள் யானை புகுந்து வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியுள்ளது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மால்லப்பா யானையை விரட்ட முயன்றுள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த யானை மால்லப்பாவை சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வனத்துறையினர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வனக்கோட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் யானை விவசாய தோட்டத்தில் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.