பான்கார்டு நிரந்தரமான வங்கிக் கணக்கு எண் ஆகும். இது இந்திய வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. இப்போது பண பரிவர்த்தனைகளில் பான்கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் இதர செயல்பாடுகளுக்கு பான்கார்டு பயன்படுகிறது. வங்கிகளில் 50,000 ரூபாய்க்கு அதிகமாக பணம் செலுத்தவோ, எடுக்கவோ பான்கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று ஆதாரும் தவிர்க்கமுடியாத ஒன்றாகி விட்டது.
இன்றைய காலக்கட்டத்தில் ஆதார் இன்றி தனிப்பட்ட வேலை முதல் அரசுசார்ந்த, வேலைகள் வரை எதையும் செய்ய இயலாது என்ற நிலை வந்துவிட்டது. இவ்வளவு பயன்பாடுடைய ஆதார்கார்டு மற்றும் பான்கார்டை நாம் எப்போது அப்டேட்டாகவும், அதே நேரம் பத்திரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மோசடி நபர்கள் கைகளில் சிக்கிவிடும்.
அந்நபர்கள் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் கையாடுதல் மற்றும் கார்டை வைத்து கடன் வாங்குதல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக உங்களது பான் மற்றும் ஆதார்அட்டை விபரங்களை தெரியாத நபர்களிடம் கொடுக்கக்கூடாது. அத்துடன் ஆதார், பான்எண் மற்றும் அதன் பிற விபரங்களை யாரிடமும் பகிரக்கூடாது.
உங்களது சிபில் மதிப்பெண் பற்றி சந்தேகம் இருந்தால் வங்கிக்கிளையை அணுகி விசாரிக்க வேண்டும். தவறு இருப்பின் உடனே போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். நீங்கள் ஜெராக்ஸ் எடுக்கும்போது அசல் ஆவணத்தை மறக்காமல் கையொடு எடுத்துவர வேண்டும். இல்லையெனில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் கைகளில் சிக்க வாய்ப்பு இருக்கிறது..