Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பாபநாசம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் என்ன ?

விவசாயத்தை முழுமையாக நம்பி உள்ள பாபநாசம் தண்ணீர் பஞ்சம் இன்றி முப்போகம் விளையும் தொகுதி ஆகும். காவிரி, கொள்ளிடம், குடஉருட்டி உள்ளிட்ட  ஆறுகள் நிறைந்த வளமான இப்பகுதியில் செங்கற்களால் கட்டப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய நெற்களஞ்சியம் உள்ளது. உலோக சிலைகள் தயாரிப்பு, மரத்தாலான தேர்கள் தயாரிப்பு, பாய் தயாரிப்பு மற்றும் நெசவுத் தொழிலும் நடைபெறுகிறது. பாபநாசம் தொகுதியில் திமுக ஒரு முறையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

அதிகமாக காங்கிரஸ் 8 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 2 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். 1989 தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி. கே. மூப்பனார் போட்டியிட்டு வென்றார். 2006 முதல் 3 முறை தொடர்ந்து போட்டியிட்டு வென்ற அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு அண்மையில் மறைந்தார். இதனால் தொகுதி காலியாக உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,60,339 பேர்.

கொள்ளிடம் ஆற்றில் 60 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையிலும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாபநாசம் ரயில் நிலத்தை மேம்படுத்த வேண்டும் என்பதும், அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. தனியார் சர்க்கரை ஆலை, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை அதிகமாக உள்ளதால் ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சுவாமிமலை முருகன் கோவிலை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விருப்பம். பாதியிலேயே கைவிடப்பட்ட நாகை, மைசூர், கூடலூர் தேசிய நெடுஞ்சாலைகள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றும், கிராம பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். கும்பகோணத்தை தனி மாவட்டமாக பிரித்து பாபநாசம் தொகுதியை அம்மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கை.

கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றின் தீவு கிராமங்களான மேலராமநல்லூர், கீழராமநல்லூர், கரும்பூர்  இடையே பாலங்கள் அமைக்கப்படவேண்டும். வெள்ளத்தடுப்பு ஆறுகளின் கரைகளை பலப்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக  பாபநாசத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என தொகுதி மக்களின் கோரிக்கை பட்டியல் நீள்கிறது.

Categories

Tech |