ஷஹீன் ஷா அப்ரிடி ஆசியக்கோப்பையில் ஆடாதது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்துள்ளார்..
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட 6 அணிகள் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும் 2ஆவது போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.. இந்த ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக பாகிஸ்தான அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக முகமது ஹஸ்னைன் சேர்க்கப்பட்டிருக்கிறார். முன்னதாக இந்தியாவில் ஜஸ்ட் பிரீட் பும்ரா காயம் காரணமாக விலகினார்.. அதேபோல இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நுஷன் துஷாரா சேர்க்கப்பட்டிருக்கிறார்.
ஷஹீன் அப்ரிடி விலகி இருப்பதால் இந்தியாவின் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தப்பிவிட்டதாக பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வம்பிழுத்து வருகின்றனர்.. அதேபோல பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ் அப்ரிடி விலகியதால் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரு நிம்மதி என்றும், அவரை ஆசிய கோப்பையில் பார்க்க முடியாமல் போனது வருத்தமாக இருக்கிறது என ட்விட் செய்திருந்தார்.. இதற்கு இந்தியாவின் முன்னாள் வீரர் இர்பான் பதான், பும்ராவும் ஹர்ஷலும் இந்த ஆசிய கோப்பையில் விளையாடாதது மற்ற அணிகளுக்கு நிம்மதி! என்று பதிலடி கொடுக்க, இந்திய ரசிகர்களும் பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் அணியிலிருந்து அப்ரிடி விலகியது குறித்து பல்வேறு தரப்பினரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஷஹீன் ஷா அப்ரிடி ஆடாதது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் முன்னாள் தேர்வு குழு தலைவருமான இன்சமாம்-உல்-ஹக் கருத்து தெரிவித்துள்ளார்.. இது பற்றி அவர் பேசியதாவது, ஆசிய கோப்பையில் ஷஹீன் அப்ரிடி விளையாடாதது பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய இழப்பு.. இந்தியாவுக்கு எதிராக அவர் ஆடாமல் போனது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு.. இந்தியாவுக்கு எதிராக கடந்த போட்டியில் அவர் நெருக்கடி கொடுத்தார். கடந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் முதல் ஓவரிலேயே அவர் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்திருந்தார்.. ஆனால் தற்போது அவர் காயம் காரணமாக விலகி இருப்பது பாதிப்பாகும். இரு அணிகளும் மோதுவது மிக விறுவிறுப்பாக இருக்கும்.. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமை தவிர வேறு யாருமே ரன்களை தொடர்ந்து குவிக்கவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
நடப்புச் சாம்பியன் ஆன இந்திய அணி இதுவரை 7 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ள நிலையில், பாகிஸ்தான அணி 2 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது..