5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுசேரி மாநிலம், கிருமாம்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 55 வயது முனியப்பன். இவர் ஒரு மீனவர் ஆவார். இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த உறவினரின் வீட்டிற்கு கடலூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி வந்து இருந்துள்ளார். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை முனியப்பன் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சிறுமியிடம் இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் உடலில் காயங்கள் இருப்பதை கண்ட சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது நடந்ததை கூறி சிறுமி அழுததாக தெரிகிறது. இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் முனியப்பனை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.