பாப்புலர் பிராண்ட் அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிராண்ட் அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சோதனையை தொடர்ந்து பாப்புலர் பிராண்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். அதில் கேரளாவில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்ட பின் கேரளாவில் அதன் நிர்வாகிகளின் செயல்பாடுகளை தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் என்.ஐ.ஏ வின் முக்கிய அதிகாரிகள் டெல்லியில் இருந்து கேரளாவிற்கு வருகை தந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையின் உதவியோடு கேரளாவில் 56 இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடைபெற்றது. இந்தியா முழுக்க தடை செய்யப்பட்டாலும் கேரளாவில் இந்த அமைப்பு ரகசியமாக செயல்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.