மின்கம்பத்தின் மீது லாரி மோதியதில் 3 டன் வைக்கோல் எரிந்து நாசமாயின.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள ரெட்டி காலனிக்கு நேற்று முன்தினம் மதியம் 2 மணி சுமார் 4 டன் வைக்கோல் பாரத்தை ஏற்றிக்கொண்டு விற்பதற்காக ஒரு லாரி வந்துள்ளது. இந்த லாரியை சேந்தமங்கலம் அருகில் உள்ள ராமநாதபுரம் புதூரில் வசித்த செல்வம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது ரெட்டி காலனியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் திடீரென்று லாரி பயங்கரமாக மோதியதில் மின்கம்பம் ஒடிந்து லாரியின் மீது விழுந்ததால் மின் வயர்கள் வைக்கோல் பாரத்தில் பட்டு தீப்பற்றி எரிந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் லாரியிலிருந்து குதித்து உயிர் பிழைத்தார். லாரியில் இருந்த வைக்கோல்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்ததால் அந்தப் பகுதி புகை மண்டலமாக இருந்தது. இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வைக்கோலை கீழே இறக்கி அதில் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தார்கள்.
ஆனாலும் லாரியில் இருந்த சுமார் 3 டன் வைக்கோல்கள் எரிந்து நாசமாயின. மேலும் லாரியில் இருந்த பலகைகளும் எரிந்தது. இத்தகவல் அறிந்த சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.