தென்கொரியாவை சேர்ந்த ஷின் பயான்ங் மூன் என்ற நபர் குஜராத் மாநிலத்துக்கு வருகை தந்தார். இவருடைய உறவினர்கள் குஜராத் வதோதரா பகுதியில் வசிக்கின்றனர். அவர்களை பார்க்க வந்த ஷின், அங்கு உள்ள உற்றாருடன் விசத்பூரா என்ற பகுதிக்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளார். இப்பகுதியில் பாராகிளைடிங் என்ற ஆகாசத்தில் பலூன் வாயிலாக பறக்கும் சாகச விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அப்போது ஷின் இந்த பாராகிளைடிங் சாகச விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு உள்ளார். இதற்கிடையில் 50 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பராகிளைடரின் கேன்ஒபே சரியாக திறக்காததால் வானத்தில் இருந்து கீழே விழுந்த ஷின் பயான்ங் படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று மற்றொரு சம்பவம் மராட்டியத்தில் நடந்து உள்ளது. மராட்டிய சதாரா மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணி சூரஜ்ஷா(30). ஹிமாசலபிரதேசம் சுற்றுலா சென்ற இவர் குலு மாவட்டத்திலுள்ள தோபி பகுதியில் பாராகிளைடிங் சாகசத்தில் கலந்துகொண்டார். பாராகிளைடர் காற்றில் இருந்தபோது அவரது பாதுகாப்பு பெல்ட் கழன்றதில் சூரஜ்ஷா தரையில் விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே சூரஜ்ஷா உட்பட இரண்டு பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சூரஜ்ஷா இறந்து விட்டார். தற்போது விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.