திருப்பூர் மாவட்டம் வாலிபாளையம் சேம்பர் ஹாலில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மூ. மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது பல்வேறு விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது. அதன்படி தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போன்று புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்ப பெறுதல், தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் முறைகேடாக வழங்கப்பட்ட நிர்வாக மாறுதல்களை ரத்து செய்துவிட்டு பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
பணி மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களை அவர்களின் சொந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு உடனடியாக பணி மாறுதல் செய்ய வேண்டும். முன்பு வழங்கப்பட்டது போன்று ஆசிரியர்கள் பெரும் உயர் கல்விக்கு ஊக்கத்தொகை வழங்குதல், கடந்த ஜூலை 1-ம் தேதி மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் வழங்குதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை கலைந்து மத்திய அரசுக்கு இணையாக ஓய்வூதியம் வழங்குதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதோடு 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி டெல்லி பாராளுமன்றத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் திரட்டி பாராளுமன்றம் நோக்கி பேரணி செல்வதற்கு அகில இந்திய அமைப்பான இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த பேரணியில் தமிழ்நாட்டு சார்பில் 1000 ஆசிரியர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் தமிழக முழுவதும் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சுவரொட்டி இயக்கம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்த தீர்மானங்களால் மாபெரும் சம்பவம் அரங்கேறப்போவதாக கல்வியாளர்கள் கூறுகின்றார்கள்.