பார்வையற்ற பெண்ணின் வீட்டில் கழிப்பறை கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டத்திலுள்ள போடி அருகே இருக்கும் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகள் மணிமேகலை. இவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இவரின் வீட்டில் கழிப்பறை இல்லாததால் அப்பகுதியை சேர்ந்த பெண்களின் உதவியுடன் பொதுக்கழிப்பறைக்கு சென்று வந்துள்ளார்.
இதனால் அவர் மிகவும் சிரமம் அடைந்து வந்த நிலையில் இது குறித்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்தது. இதனால் அவர் வீட்டுக்கு தனிநபர் இல்ல கழிப்பறை கட்டிக் கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் 12 ஆயிரம் மதிப்பில் தனி நபர் இல்ல கழிப்பறை கட்டும் பணி தொடங்கி இருக்கின்றது. இதனால் மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.