காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய 3 வாலிபர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லிக்குட்டை பகுதியில் ரவி, பிரபு, தினேஷ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த 3 வாலிபர்களும் மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே தண்ணீர் வெளியேறும் பாதையில் ஒரு பாறை மீது நின்று தண்ணீர் வழிந்து ஓடும் காட்சியை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.
இதனால் பாறையில் இருந்து தண்ணீரை கடந்து கரைக்கு செல்ல முடியாமல் 3 வாலிபர்களும் காப்பாற்றங்கள்; காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர். இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூன்று பேரையும் பத்திரமாக மீட்டனர்.