பாறையை தகர்ப்பதற்காக வைத்திருந்த வெடி வெடிக்காத நிலையில் திடீரென்று வெடித்ததால் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி அருகே இருக்கும் மன்னாதம்பாளையம் காவிரி ஆற்றில் மத்திய அரசின் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தனியார் நிறுவனத்தால் நடைப்பட்டு வருகின்றது. இந்த பணிகளில் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அருகே இருக்கும் குஞ்சாண்டியூர் ஊரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றார். குழி தோண்டும் பணிக்காக சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அருகே இருக்கும் பெரிய சோரகையை சேர்ந்த குமார் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரும் 3 மாதங்களாக மன்னாதம்பாளையத்தில் தங்கி வேலை செய்து வந்தார்கள்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் ரவியும் குமாரும் துளைபோடும் இயந்திரம் மூலம் பாறைகளை குழி போட்டுக் கொண்டு இருக்கும் போது ஒரு பாறையை தகர்ப்பதற்காக ஏற்கனவே வைத்திருந்த வெடி ஒன்று வெடிக்காமல் இருந்ததை இவர்கள் கவனிக்காமல் இருந்த நிலையில் அது திடீரென வெடித்துள்ளது. இதனால் துண்டு துண்டாக பாறை சிதறி விழுந்ததால் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ரவியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.