சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வரும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள காரைமேடு ஊராட்சிக்குட்பட்ட நாகப்பட்டினம், பூம்புகார் செல்லும் நெடுஞ்சாலையில் சூரக்காடு பாலம் இருக்கிறது. இந்த பாலத்தில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வரும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையுள்ளது. மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாலத்தை கடக்கும் போது கடுமையான துர்நாற்றம் வீசி வருவதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பின்னர் கோழி இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை உண்ண வரும் பன்றிகள் பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலம் அருகில் கோழி கழிவுகள் கொட்டுவதை தடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.