பாலம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தி.மு.க பிரமுகர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி ஜி.என் செட்டி தெருவில் வினோத்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆரணி 9-வது வார்டு திமுக இளைஞரணி செயலாளராக இருக்கிறார். மேலும் வினோத்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவியும், ஜஸ்வந்த் என்ற மகனும், 4 மாத குழந்தையும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வினோத்குமார் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
இவர் திருநின்றவூர்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் வடமதுரை பெரிய காலணி அருகே சென்ற போது சிறு பாலம் கட்டுவதற்காக நெடுஞ்சாலைதுறையினர் தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் எதிர்பாராதவிதமாக விழுந்து விட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று வினோத்குமாரை மீட்க முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமாரின் சடலத்தை மீட்டனர். பின்னர் வினோத்குமாரின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.