தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக பாலாற்றில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பாலாற்றில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால் படாளம், புதூர் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள், பாதுகாப்புக்காக, முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாலாற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.