கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய 15,500 பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப்பீடாக வழங்க அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
பாலின பாகுபாட்டை கடைபிடித்தாகக் கூறி கூகுள் நிறுவனம் 11 கோடியே 8 லட்சம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பின் படி (சுமார் ரூ.922 கோடி) இழப்பீடு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் கூகுள் தளத்தில், பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பெண்களைக் காட்டிலும் அந்நிறுவனத்தில் ஆண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஊதிய வேறுபாடும் கடைபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டதால் கடந்த 2017 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இங்கு சமமான பதவி வகிக்கும் ஆண்களை விட பெண்களுக்கு கூகுள் நிறுவனம் குறைவான ஊதியம் வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2013ம் ஆண்டு முதல் கலிபோர்னியாவில் கூகுளில் பணியாற்றிய 15,500 பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப்பீடாக வழங்க கூகுள் நிறுவனம் நேற்று ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “இந்த வழக்கில் நாங்கள் இருதரப்பினரும் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம். அதன்படி, இந்த வழக்கில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் கூகுள் நிறுவனம் மறுக்கிறது.
எல்லா நேரங்களிலும் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் கூகுள் நிறுவனம் முழுமையாக இணங்கியுள்ளது” இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை நீதிபதிகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதற்கு முன்னதாக, 2021 ஆம் ஆண்டு, பெண்கள் மற்றும் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் மீது பாகுபாடு காட்டியதாக 38 லட்சம் டாலர்கள் அபராத தொகையை அமெரிக்க தொழிலாளர் துறைக்கு செலுத்த கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டது.