Categories
மாநில செய்திகள்

மாணவிகளை சீண்டும் ஆசிரியர்கள்…. “பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் குழுக்களை உருவாக்க வேண்டும்”….. தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் குழுக்களை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது..

மதுரையை சேர்ந்த  ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக போக்ஸோ வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன. இதில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும் வழக்குகள் நிறைய பதிவாகி வருகிறது. இதனால் பள்ளியில் பயிலக்கூடிய பெண் குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்..

இதனை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு 2012 ஆம் ஆண்டு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி மாணவ, மாணவிகளுக்கு மனரீதியான அழுத்தத்தை போக்கி கவுன்சிலிங் ஒன்றை வழங்க மொபைல் மனநல ஆலோசனை  நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால் அதனை தற்போது வரை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. இது தொடர்பாக பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை..

எனவே 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையங்கள் அமைத்து மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களிலிருந்து மாணவ, மாணவிகளை பாதுகாப்பது முக்கியமானது. பாலியல் துன்புறுத்தல் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கின்றது. தமிழக அரசு சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தவும், கொள்கைகளை உருவாக்கவும், உதவும் வகையில் இந்த நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்கின்றது எனக் கூறி, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் புகார் குழுக்களை உருவாக்க வேண்டும்.

பள்ளிகளில் பாலில் குற்றங்கள் நிகழாத வண்ணம் கொள்கைகளை உருவாக்கி அதன் நகல்களை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் புகார் தெரிவிப்பதற்கும், தீர்வு காண்பதற்கும் உரிய நடைமுறை வகுக்கப்பட வேண்டும். இதனை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினை அமைக்க வேண்டும்.. அந்த குழு விழிப்புணர்வு நிகழ்வுகளை பள்ளிகளில் நடத்த வேண்டும். அந்த குழு மனநல ஆலோசனை மையங்களில் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பித்து வழக்கினை முடித்து வைத்துள்ளனர்.

Categories

Tech |