விருப்பமுடன் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. விபச்சாரத்தை ஒரு தொழில் என்றும், பாலியல் தொழிலாளர்கள் சட்டத்தின்கீழ் கண்ணியம் மற்றும் சமமான பாதுகாப்பிற்கு தகுதியானவர்கள் என கூறியுள்ளது. நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு சட்டத்தை சமமான பாதுகாப்பு உரிமை உள்ளது, மற்றும் ஒப்புதலின் அடிப்படையில் குற்றவியல் சட்டம் அனைத்து வழக்குகளிலும் சமமாக பயன்படுத்தப்பட வேண்டும்.
பாலியல் தொழிலாளர்கள் என்பது தெளிவாக தெரிந்தால் போலீசார் தலையிடுவது அல்லது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கூடாது. எந்த தொழிலாக இருந்தாலும் அரசியலமைப்பின் 21 பிரிவின் கீழ் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் கண்ணியமான வாழ்க்கைக்கு உரிமை உண்டு என்று கூற வேண்டியதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ, தண்டிக்கவோ, துன்புறுத்தவோ, கூடாது என்றும், தன்னார்வ பாலியல் தொழில் சட்டவிரோதமானது அல்ல, விபச்சார விடுதியை நடத்துவது மட்டுமே சட்டவிரோதமானது என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.