பள்ளி தாளாளர் விஷம் குடித்துக் கொணடே பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு தாளாளர் வினோத்(34) பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வினோத் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் வினோத் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது மாணவ மாணவிகளுக்கு தெரியும்” என கூறியுள்ளார். இதனையடுத்து ஒரு சில ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெயர்களை குறிப்பிட்டு வினோத் அவர்களை புகழ்ந்து அறிவுரை வழங்குவது போல பேசியுள்ளார். பின்னர் மாணவர்களின் தாய், தந்தையை குறிப்பிட்டு “நீங்கள் என்னை தப்பாக நினைக்க வேண்டாம். நான் எந்த தவறும் செய்யல” என கண்ணீருடன் பேசிக்கொண்டே பூச்சி மருந்தை குடித்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.