பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிவசங்கர் பாபா சமீபத்தில் சிக்கினார். அவர் மீது தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரில் முகாந்திரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்க சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டதால் சிபிசிஐடி அதிகாரிகள் டேராடூன் சென்றனர். ஆனால் போலீசார் அங்கு வருவதை தெரிந்து கொண்ட சிவசங்கர் பாபா அங்கிருந்து டெல்லிக்கு தப்பிச் சென்றார். இருப்பினும் தனிப்படை போலீசார் அவரை டெல்லியில் வைத்து இன்று கைது செய்தனர். இந்நிலையில் சர்ச்சையில் சிக்கிய சென்னை கேளம்பாக்கம் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை மூட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறைக்கு வேண்டுகோள் வைத்துள்ளது.
அத்துடன் பள்ளியை அரசே ஏற்று நடத்தவேண்டும் எனவும் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது. பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு வேறு பள்ளியில் சேர உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் கூறியுள்ளது.இதனிடையே 5 பேர் கொண்ட சிபிசிஐடி தனிப்படையினர் சுஷில் ஹரி பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் தற்போது பள்ளி வளாகம் முழுவதும் மக்கள் எல்லா இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் .மேலும் எந்தெந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன என்பது குறித்தும் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்