பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த பெண்கள் தான் அதிகம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக ஐநா வருத்தம் தெரிவித்துள்ளது
உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் பெண் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஓய்வதற்குள் பலராம்பூர் மாவட்டத்தில் அதே இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஐநா அதிகாரிகள் இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தை சார்ந்த சிறுமிகள் மற்றும் பெண்களே பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஹத்ராஸ் மற்றும் பலராம்பூரில் சமீபத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவங்கள் பின்தங்கிய சமூகத்தை சார்ந்த பெண்கள் தான் அதிகமாக பாதிப்புகளைச் சந்திக்கின்றனர் என்பதை நினைவூட்டுகிறது. இந்திய அரசு சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது.
ஆனால் அது இன்னும் பலமாக வேண்டும். இதுபோன்ற குற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரதமரின் கருத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து வன்முறைகளுக்கும் தீர்வு காண மக்கள் சமுதாயத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்கு நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.