பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியுமா ? என குற்றவாளியிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கேள்வி எழுப்பினார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த அரசு ஊழியரான மோகித் சுபாஷ் ஜவான் என்பவர் பள்ளி சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சிறுமிக்கு பதினெட்டு வயதில் நிறைவடைந்ததும் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதாகவும், அதற்கு சிறுமி மறுத்ததாகவும் தெரிகிறது. தற்போது பதினெட்டு வயது பூர்த்தியானதால் திருமணம் குறித்து மோகித் சுபாஷ் ஜவானிடம் பேசியபோது,
ஏற்கனவே தனக்கு திருமணம் ஆகிவிட்டது எனக் கூறிய அவர் மறுத்துள்ளார். இதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீன் கோரி மோகித் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் . இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்கிறீர்களா ? என்று குற்றம் சாட்டப்பட்ட மோகித்திடம் கேள்வி எழுப்பினார். தாங்கள் வற்புறுத்தவில்லை, ஆனால் திருமணம் செய்ய மறுத்தால் கைதாவதோடு அரசு வேலையும் பறிபோகும் எனத் தெரிவித்துள்ளார். கைதாவதில் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி மோகித் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.