மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் குவிந்துகிடக்கும் பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படுகிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி அனைத்து அரசு மாவட்ட அலுவலகங்களும் இங்குதான் உள்ளன. கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற கலைஞர் கைது செய்து அடைக்கபட்டது பாளையங்கோட்டை சிறையில் தான்.
1957 முதல் 1971 வரை மேலப்பாளையம் தொகுதியாக இருந்தது. பின்னர் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி ஆனது. பாளையங்கோட்டையில் நடைபெற்ற 10 தேர்தல்களில் 7 முறை திமுகவும், 3 முறை அதிமுகவும் வென்றுள்ளன. தற்போது எம்எல்ஏவாக முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் உள்ளார். பாளையங்கோட்டையில் மொத்தம் 2,63,944 வாக்காளர்கள் உள்ளனர். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு உருக்குலைந்து கிடைப்பதாக கூறும் மக்கள் முக்கிய பேருந்து நிலையங்கள் இடிக்கப்பட்டு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட குலவணிகர்புரம் ரயில்வே கேட் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். மேலப்பாளையம் பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது.
நெல்லை மற்றும் பாளையங்கோட்டையை இணைக்கும் சுலோச்சனா முதலியார் பாலம் கட்டப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கட்டப்பட்ட மாற்றுப்பாலம் இன்னும் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படவில்லை என்றும் புகார் கூறுகின்றனர். பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கை. கடந்த 25 ஆண்டுகளாக திமுக தொடர்ந்து வெற்றி பெறும் தொகுதி என்பதால் ஆளும் கட்சியால் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.