தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்களது பிஎஃப் விவரங்களை சரிபார்க்கவும், அதில் மாற்றங்களை செய்யவும் முன்பெல்லாம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். அவர்களின் சிரமத்தை குறைப்பதற்காக அரசுத் தரப்பில் UMANG என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி மூலமாக வீட்டில் இருந்து கொண்டே பிஎஃப் தொடர்பான அனைத்து சேவைகளையும் எளிதாக பெறமுடியும். பிஎஃப் பேலன்ஸ் பார்ப்பது, பிஎஃப் பணம் எடுப்பது மற்றும் தகவல் மாற்றங்கள் போன்ற பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பெற முடியும்.
தற்போதைய நிலையில் பிஎஃப் சந்தாதாரர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான 16 விதமான சேவைகளை இந்த செயலி மூலமாக பெறலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பல்வேறு சேவைகளை பெறுங்கள் என்று பிஎஃப் அமைப்பு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த செயலியை டவுன்லோடு செய்ய எளிய வழி உள்ளது. 9718397183 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் மட்டும் போதும். உடனடியாக ஒரு எஸ்எம்எஸ் வரும். அதில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் அனுப்பப்படும். அதை கிளிக் செய்து உள்ளே சென்று டவுன்லோடு செய்து அனைத்து விதமான சேவைகளையும் நீங்கள் பெற முடியும்.