தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் கடந்த 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பொதுக் கூட்டங்களையும், பல்வேறு பிரச்சாரங்களையும் நடத்தி வந்தனர்.
தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பொதுமக்களும், அரசியல் கட்சி வேட்பாளர்களும் தனிநபர் இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என புகார்கள் எழுந்தது. அதோடு மட்டுமில்லாமல் பொதுமக்கள் தற்போது பொது இடங்களிலும் முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர்.
இதனால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒமிக்ரான் தொற்றின் திரிபான “பிஏ 2” வைரஸ் பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதாக எச்சரித்துள்ளனர். எனவே இந்த வைரஸ் ஒமிக்ரான் போன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வேகமாக பரவ தொடங்கினால் முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படும்.
அதேபோல் தமிழகத்திலும் தொற்று கண்டறியப்பட்டால் பொது இடங்களில் கட்டுபாடுகள், இரவு நேர ஊரடங்கு, கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்த வாய்ப்புள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் “பிஏ 2” வைரஸ் தொற்றின் தாக்கத்தை பொறுத்து தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.