விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு பிகில் படத்தை போட்டு காட்டி டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சசிவர்மன் தனது மாமாவுடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்றபோது தவறி கீழே விழுந்துள்ளார். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனை அனுமதித்தனர். சிறுவனுக்கு தலையில் காயம் இருந்ததால் தையல் போட முடிவு செய்த மருத்துவர்கள் வலி தெரியாமல் இருக்க முதலில் ஊசி போட முயன்றுள்ளனர். ஆனால் பயத்தில் சிறுவன் ‘ஊசி வேண்டாம்’ என அடம்பிடித்து, சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று புரியாமல் டாக்டர்கள் தவித்தனர். அப்போது அங்கு இரவு பணியில் இருந்த ஜின்னா என்பவர் சிறுவனை சமாதானப்படுத்தும் முயற்சியாக ‘உனக்கு என்ன பிடிக்கும்?’ என கேட்டுள்ளார்.
இதற்கு நடிகர் விஜய்யை பிடிக்கும் என சிறுவன் கூறியுள்ளான். இதையடுத்து ஜின்னா தனது செல்போனில் வைத்திருந்த விஜய்யின் பிகில் படத்தை போட்டு சிறுவனின் கையில் கொடுத்துள்ளார். சிறுவன் மெய்மறந்து படம் பார்த்துக்கொண்டிருந்த போது மருத்துவர்கள் ஊசி மூலம் மருந்து செலுத்தி தையல் போட்டு சிகிச்சை அளித்தனர். விபத்தில் காயமடைந்த சிறுவன் ஒருவனுக்கு பிகில் படத்தைப் போட்டுக் காட்டி மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.