பிக்பாஸ் பிரபலம் கேப்ரியலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி no.1’ நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேப்ரியலா. இதையடுத்து இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தினார். இதன் பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்த கேபி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ளார்.
தற்போது இவர் பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் கேபி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் ‘தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தான் வந்தேன். ஆனாலும் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. உங்களது அன்பிற்கு நன்றி. நான் நலமுடன் தான் இருக்கிறேன். தயவுசெய்து நீங்களும் பாதுகாப்புடன் இருங்கள், அன்பை மட்டுமே பரப்புங்கள் கொரோனாவை பரப்பாதீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார் .