பிசிசிஐ இன்று 2022-ஆம் ஆண்டிற்காக ஐபிஎல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 26-ஆம் தேதி தொடங்கும் போட்டிகள் மார்ச் 29-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. கிட்டத்தட்ட 65 நாட்கள் நீடிக்கும் இந்த தொடரில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டபுள் ஹேடர்ஸ் என்றழைக்கப்படும் ஒரே நாளில் 2 போட்டிகள் என மொத்தம் 12 முறை நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
மாலை போட்டி 7.30 மணிக்கும், மதியம் போட்டி 3.30 மணிக்கும் நடைபெற இருக்கிறது. இந்த முறை 2 குரூப்களாக ஐபிஎல் அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப்-A பிரிவில் கொல்கத்தா, லக்னோ, மும்பை இந்தியன்ஸ், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. குருப்-B பிரிவில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத், பஞ்சாப், பெங்களூரு ஐதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். அடுத்த குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோதும் வகையில் ஐபிஎல் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் அட்டவணையில், மார்ச் 26-ஆம் தேதி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. அதனை தொடர்ந்து 27ஆம் தேதி மதியம் மும்பை, டெல்லி அணிகளும், மாலை பெங்களூரு, பஞ்சாப் அணிகளும் மோதுகின்றன. 28 தேதி புதிய அணிகளான குஜராத், லக்னோ அணிகளும், வரும் 29ஆம் தேதி ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளும் மோதுகின்றன.
அதில் 20 போட்டிகள் வான்கடேவில், 15 போட்டிகள் பிராபோர்ன் மைதானத்தில், அடுத்த 20 போட்டிகள் டி.ஓய். பாட்டில் மைதானத்தில், அடுத்த 15 போட்டிகள் புனேவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வரும் 26ஆம் தேதி வான்கடே மைதானத்தில் முதல் போட்டியில் மோதுகின்றன.