கோவில் வளாகத்தில் பிச்சை எடுத்த நபர் ஒரு தகராறு சம்மந்தமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் பிடெக்(B.TECH ) படித்த பட்டதாரி என தெரியவந்தது. இந்த தகவல் காவல்துறையினருக்கும் அதிர்ச்சி அளித்தது.
ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகன்னாதர் கோவில் வளாகத்தில் பிச்சை எடுப்பவர் கிரிஜா சங்கர் மிஸ்ரா.இவர் வழக்கமாக பிச்சை எடுக்கும் இடத்தில் ரிக்ஷாக்காரர் ஒருவர் தனது வாகனத்தை நிறுத்தினார். அந்த வாகனத்தை அங்கிருந்து எடுக்குமாறு பிச்சைக்காரர் கூறவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு முற்றி அடிதடி ஆக மாறியது. பின்னர் பிச்சைக்காரர் தாக்கியதில் ரிக்ஷாகாரருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு இருவரிடமும் புகார் கடிதம் எழுதித் தருமாறு கேட்டுள்ளனர்.அப்போது பிச்சைக்காரர் கிரிஜா சங்கர் மிஸ்ரா, ஆங்கிலத்தில் சரளமாக தனது புகார் மனுவை எழுதினார்.
இதைப் பார்த்து அதிர்ந்து போன காவல்துறையினர் அந்த பிச்சைக்காரரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதனால் அவரின் உண்மையான முகம் தெரிய வந்தது அப்போதுதான், அவரது பின்னணி தெரியவந்துள்ளது. புவனேஸ்வரை சேர்ந்த ஓய்வுபெற்ற டி.எஸ்.பி.யின் மகன் கிரிஜா சங்கர் அவர் என்பதும் பி.டெக். பட்டதாரி என்பதும் தெரியவந்தது.
படிப்பை முடித்த சில ஆண்டுகளிலேயே மனநலம் பாதிக்கப்பட்ட அவர் , புரிக்கு வந்து பிச்சை எடுத்து வந்தார் என்பதையும் போலீசார் தெரிந்துகொண்டனர். அவரது குடும்பத்தினரை கண்டறிந்து சேர்த்து வைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.