கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பது போல நடித்து கஞ்சா விற்பனை செய்த சாமியார் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் முக்கியமான கோவில்களில் பிச்சை எடுப்பதுபோல சாமியார் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர் ஐஸ்ஹவுஸ் பகுதியில் இருக்கும் முருகன் கோவிலில் பிச்சை எடுப்பது போல அமர்ந்திருந்த சாமியாரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருக்கிறதா என கேட்டுள்ளனர்.
இதனால் சாமியார் கஞ்சா பொட்டலங்களை எடுத்து கொடுத்த போது மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ராயப்பேட்டை பகுதியில் வசிக்கும் சேகர் என்பது தெரியவந்துள்ளது. இவர் பிச்சை எடுப்பது போல நடித்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்துள்ளார்.
இவருக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் ஆசைத்தம்பி ஆகிய இருவர் கஞ்சா பொட்டலங்களை சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 66 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.