தமிழக சினிமா துறையில் கொடிகட்டி பறப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைத்து, பட்டி தொட்டி எங்கும் அவரை கொண்டாடி வருகின்றனர். 1990 களில் இருந்தே நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார், அரசியலில் ஈடுபடுவார் என்றெல்லாம் பேசப்பட்டது. ரஜினியின் அரசியல் தலையிட்டால் அப்போது ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது.
இந்த நிலையில் தான் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்க்கு சாதகமான பதிலை கொடுத்தார். நடிகர் ரஜினிகாந் நான் அரசியலுக்கு வருவேன்; ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் என்றெல்லாம் பேசியிருந்தார்.
ஆனால் கொரோனா சூழல், அவரது உடல்நலம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி.. நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று அறிக்கை வெளியிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா ? என்ற விவாதம் கடந்த சில நாட்களாக கிளம்பி உள்ளது.
இதனை உறுதி செய்யும் வகையிலேயே இன்று நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஆளுநரை சந்தித்தார். இந்த சந்திப்பு முடிந்து செய்தியாளரிடம் பேசிய அவர், ஆம் ஆளுநரிடம் அரசியல் குறித்து பேசினேன். நாடாளுமன்றம் தேர்தல் குறித்தும் பேசினோம். ஆனால் இப்போதைக்கு அதை சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.
இதனால் மீண்டும் ரஜினியின் அரசியல் நகர்வு இருக்குமோ அல்லது நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வாரோ அல்லது பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரோ என்று பல்வேறு யூகங்களில் அவரது ரசிகர்கள் கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.