ஹொங்ஹொங்கில் 5 வயதே ஆன குழந்தையை அவரின் தந்தையும் இரண்டாம் தாயும் அடித்து உணவு கொடுக்காமல் துன்புறுத்தியதால் குழந்தை மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
ஹொங்ஹோங் நகரில் Chen Ruilin என்ற 5 வயதே ஆன குழந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அந்த குழந்தையை பரிசோதித்தபோது உடல் முழுக்க சுமார் 130 காயங்கள் இருந்ததை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தார்கள். அதன் பின்பு அந்த குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மேலும் பிரேத பரிசோதனையில் குழந்தை ஆண்டுகணக்கில் கொடுமைகளை அனுபவித்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்த நிலையில் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதனை எதிர்த்து போரிட சக்தியில்லாமல் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
அதாவது குழந்தையினுடைய இரண்டாவது தாய் Huang Xiaotong (30) தான் குழந்தையை பிரம்பால் அடித்து, கத்திரிக்கோலால் குத்தி, உணவு கொடுக்காமல் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அந்த குழந்தை தன் மன வலிகளை வெளிப்படுத்த தரை முழுக்க கிடக்கும் இரத்தத்தை சுவரில் ஓவியமாக வரைந்துள்ளது.
இது மட்டுமன்றி குழந்தையை சிறிதும் இரக்கமின்றி, மேல் தளத்திலிருந்து தூக்கி வீசியிருக்கிறார்கள். அதாவது அந்த சிறுமியின் தந்தை Chen Haiping மற்றும் Huangன் தாய் ஆகிய இருவரும் Huangஉடன் சேர்ந்து கொடுமை செய்திருக்கிறார்கள். இதனை குடும்பத்தில் உள்ள மற்ற நபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்றோர் சாட்சி கூறியிருக்கிறார்கள்.
இதனைத்தொடர்ந்து அந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வரும் 20ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த குழந்தையின் அண்ணனான 8 வயது சிறுவனும் கொடுமைகள் அனுபவித்து வந்துள்ளார். தற்போது சிறுவன் தந்தைவழிப் பாட்டி ஒருவரின் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்.