அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அதிபரானால் இரட்டை கோபுர தாக்குதல் போன்ற மற்றொரு தாக்குதல் நாட்டில் அரங்கேறும் என ஒசாமா பின்லேடன் மருமகள் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் வேலை இன்மை ஆகிய காரணங்களால் அதிபர் டிரம்ப் மீது மக்கள் கோபம் கொண்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஜோ பிடனுக்கு 52 விழுக்காடு மக்களும், அதிபர் டிரம்புக்கு 42 விழுக்காடு மக்கள் மட்டுமே ஆதரவு செலுத்தி இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஜோதிடன் அமெரிக்காவின் அதிபர் ஆனால் இரட்டை கோபுர தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் நாட்டில் அரங்கேறும் என அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை தோற்றுவித்த ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின்லேடன் கூறியுள்ளார். தற்போது சுவிஸர்லாந்தில் வசித்து வரும் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் ஒபாமாவுடன் காலத்தில் மட்டுமே அதிகரித்தது. இந்த பயங்கரவாதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கும் அப்போதுதான் ஊடுருவினர். இருந்தாலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பயங்கரவாதிகளை வேருடன் அழித்து அனைவரையும் பாதுகாத்தார்.
அவர் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை தொடக்கத்திலேயே முறியடித்தார். மனதளவில் நான் எப்போதும் அமெரிக்கர் தான். இந்த தலைமுறையில் முக்கியமான இந்த தேர்தலில் ட்ரம்ப்பை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மேற்குலக கலாச்சார மற்றும் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு இது மிக அவசியம். மக்களுக்காக அவர் செய்த அர்ப்பணிப்புகள் மற்றும் உழைப்பை நான் முழுமனதுடன் பாராட்டுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.