அமெரிக்காவில் இருந்து விசாரணை குழு வந்ததாக கூறிய தகவலில் உண்மை இல்லை.
கர்நாடக மாநிலத்தில் பாஜக வினர் இணையதளத்தில் புழங்கும் பிட்காயின் முதலீட்டில் ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். இது தொடர்பான வழக்கை கர்நாடக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை விசாரிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து எப்.பி.ஐ குழு டெல்லிக்கு வந்திருப்பதாக கடந்த 8-ஆம் தேதி தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை என சிபிஐ மறுத்துள்ளது.
அதாவது பிட்காயின் ஊழல் வழக்கை விசாரிக்க அமெரிக்கா எந்த குழுவையும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவில்லை. இதற்கான எந்த ஒரு அனுமதியையும் இதுவரை அமெரிக்கா சிபிஐயிடம் கேட்கவில்லை. இந்தியாவில் சர்வதேச போலீஸ் அமைப்பாக சிபிஐ செயல்பட்டு வருகிறது. இது எப்.பி.ஐ போன்ற சர்வதேச சட்ட அமலாக்க அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த தகவலில் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.