Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிணமாக தொங்கிய தொழிலாளி… இதுல ஏதோ மர்மம் இருக்கு… மயிலாடுதுறையில் பரபரப்பு போராட்டம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே செங்கல் சூளை தொழிலாளி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நெப்பத்தூர் கிராமத்தில் ஏராளமான தொழிலாளர்கள் ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனர். நெம்மேலி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் அங்கு வேலை செய்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரை செங்கள் சூளை உரிமையாளர் வேலையிலிருந்து நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து செங்கல் சூளைக்கு சீனிவாசன் தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கிக்காக அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செங்கல் சூளைக்கு கடந்த 15-ஆம் தேதி சீனிவாசன் வந்ததாக கூறப்படுகிறது. அங்கு ஊழியர்களுடன் பேசிவிட்டு சென்றுள்ளார்.

அதன்பின்பு அப்பகுதியில் உள்ள ஷெட்டில் சீனிவாசன் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அதனை செங்கல் சூளைக்கு நேற்று முன்தினம் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருவெண்காடு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் திருவெண்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் சீனிவாசன் சாவில் மர்மம் இருப்பதாக கூறினர். மேலும் அதற்கு காரணமான குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதுவரை அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சீர்காழி தாசில்தார் ஹரிதரன், மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீலதா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 12 மணி நேரமாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

Categories

Tech |