தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மே 24-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், “பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் திமுகவினர் ஈடுபட வேண்டும். முழு ஊரடங்கால் தமிழக மக்களின் உணவுத் தேவைக்கு எவ்வித தடையும் ஏற்படாத வகையில் பசியாறுங்கள். ராணுவத்திற்கு நிகரான கட்டுப்பாட்டுடன் உதவிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.