அமமுக நிர்வாகி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் தெற்கு காரசேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்து கொண்டிருந்தார். இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றிய அமமுக நிர்வாகியாக இருந்தார். இவர் பாளையங்கோட்டையில் உள்ள குல வணிகர் குலத்தில் குடியிருப்பு வளாகத்தில் மனைவி, குழந்தையுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கடையிலிருந்து சுப்பிரமணியன் நேற்று இரவு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வீட்டின் அருகே சென்றபோது அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பித்துச் சென்று விட்டனர். அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதையடுத்து போலீஸார் அங்கு வந்து சுப்பிரமணியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சுப்பிரமணியன் தனது சொந்த ஊரில் சொந்தமாக வீடு கட்டி வருகின்ற நிலையில் நிலம் தொடர்பாக பிரச்சினை நிலவி வந்ததாக கூறப்படுகின்றது. ஆகையால் நிலப் பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணம் இருக்குமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.