ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தலைமை தளபதி தனது கடைசி நிமிடத்தில் பேசியது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை அறிந்த நஞ்சப்பசத்திரம் மக்கள் உடனே களத்தில் இறங்கி தீயை அணைத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அதிகாரிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு உதவி செய்தனர். அந்த வகையில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
பிபின் ராவத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மருத்துவ பணியாளர்கள் கூறியதாவது: “விபத்து நடந்த இடத்திலிருந்து பிபின் ராவத் என்று தெரியாமலேயே அவரை ஆம்புலன்ஸில் கொண்டு வந்தோம். அடுத்த சில நிமிடத்தில் கேப்டன் வருணையும் எடுத்து வந்தனர். இருவரையும் ஒரே ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து புறப்பட்டோம். ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருந்த போது தளபதி பிபின் ராவத் இந்தியில் பேசினார். அது எனக்கு ஒன்றும் புரியவில்லை. அருகிலிருந்த மருத்துவ அதிகாரிகளிடம் அவர் இந்தியில் ஏதோ கூறினார். தீவிர நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்றும்படி கூறியது மட்டும் எனக்கு புரிந்தது.
இருவரையும் மருத்துவமனையில் உயிரோடு சேர்த்தோம். ஹெலிகாப்டர் விபத்து நடந்ததாக மதியம் 12: 36 மணிக்கு உதவி எண்ணுக்கு அழைப்பு வந்தது. உடனே மருத்துவ பணியாளர்களுடன் 12.40 மணியளவில் சம்பவ இடத்தை சென்றடைந்தோம். ஏற்கனவே ஆம்புலன்சில் சென்றவர்கள் பிபின் ராவத் உடலை எங்கள் வாகனத்துக்கு மாற்றினார்கள். உடனே வாகனத்தை ஓட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தேன்” என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தனது கடைசி அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.