ஹரியானா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் கணிசமான அளவில் குறையத் தொடங்கியுள்ளது. எனவே அம்மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன.மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப் போவதாக அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்திலும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனைத்தொடர்ந்து ஹரியானா மாநில அரசும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஹரியானா மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்வர் பால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அதோடு நேரடி வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்கள் முறையான ஒரு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும். முன்னதாக பள்ளி மாணவர்கள் 75 சதவிகிதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் தற்போது அவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது. மற்ற வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும்.” இவ்வாறு அவர் பதிவிட்டு இருந்தார்