சசிகலா பிப்ரவரி 10ஆம் தேதி மக்களை சந்திக்க சென்னை வர இருக்கும் நிலையில் நமது எம்ஜிஆர் நாளேட்டில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மிக விரைவில் தமிழகம் திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் சசிகலா தமிழகம் வந்ததும் அதிமுகவை மீட்டெடுப்பார். அவர் அதிமுகவை மீட்டெடுக்க போவதை இனி எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. ஏறிய ஏணியை எட்டி உதைக்கும் வஞ்சக பிறவிகளின் சுயரூபத்தை மக்களிடையே வெளிப்படுத்தும் தருணம் வந்துவிட்டது என நமது எம்ஜிஆர் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் சென்னை வரும் சசிகலா பிப்ரவரி 10ஆம் தேதி மக்களை சந்திப்பார் என்று தகவல் வெளியான நிலையில், நமது எம்ஜிஆர் நாளேட்டில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.