உத்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா 3-வது அலை அதிவேகமாக பரவி வந்ததை அடுத்து இம்மாத தொடக்கத்தில் இருந்து தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அம்மாநிலம் முழுவதும் கடந்த 16ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடும்படி அரசு உத்தரவிட்டது.
எனினும் அம்மாநிலத்தில் கொரோனா தொற்று நிலைமை கட்டுக்குள் வராததால் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கைகளை ஜனவரி30 வரை நீட்டித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் கொரோனா தொற்று நிலைமையை மதிப்பாய்வு செய்த உத்திரப்பிரதேச அரசு, பிப்ரவரி 15ஆம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மீண்டும் மூடப்பட்டிருக்கும் என்று தற்போது அறிவித்துள்ளது. இருப்பினும் வரவுள்ள பொதுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து உத்திரப் பிரதேச மாநில கூடுதல் தலைமை செயலர் அவ்னிஷ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் “மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மார்ச் 10ஆம் தேதி முதல் தேர்வுகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையில் பொதுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு பிப்ரவரி 15 வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையில் மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.