பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்கள் பயணம் செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி கல்லூரிகளும் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்கள் பயணம் செய்ய தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. அதன்படி புறநகர் ரயில்களில் பயணம் செய்ய வரும் மாணவர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் தங்கள் பள்ளி, கல்லூரிகளின் அடையாள அட்டை அல்லது பயணச்சீட்டை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.