கடலூர் மாவட்டத்தில் உள்ள குமராட்சி பகுதியில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 முறை கர்ப்பமான இளம் பெண்ணுக்கு வயிற்றில் கரு தங்கவில்லை. இதனையடுத்து இளம்பெண் 3-வது முறையாக கருவுற்ற பிறகு அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். அந்த கருவும் கலைந்ததால் கணவரின் குடும்பத்தினர் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்களோ என இளம்பெண் அச்சமடைந்தார். இதனால் கடந்த 9 மாதங்களாக வயிற்றில் துணியை கட்டி கர்ப்பிணி போல நடித்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து வருவதாக வீட்டிலிருந்து கூறிவிட்டு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் குழந்தை பிறப்பதற்கான நேரம் வந்து விட்டதாக கூறி இளம் பெண்ணின் தாய், தந்தை, மாமியார் ஆகியோர் அவரை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய டாக்டர்கள் இளம்பெண்ணை அழைத்துச் சென்றபோது, கரு நிலைக்காமல் போனதையும், குடும்பத்தினருக்கு பயந்து கர்ப்பிணி போல் நடித்ததையும் இளம்பெண் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து உங்களது குடும்பத்தினரிடம் நிலைமையை எடுத்து கூறுவதாக டாக்டர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.
இதற்கிடையே வெளியே வந்த பெண் நான் கழிவறைக்கு செல்லும் போது குழந்தை கீழே விழுந்து இறந்து விட்டதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்த போது அவர்கள் நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பெண்ணின் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உரிய அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.