தாய் மற்றும் குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆண்டாபட்டு கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிறைமாத கர்ப்பிணியான சென்னம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி சென்னம்மாலுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து சென்னமாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிக்சைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சென்னம்மாலுக்கு ஆண் குழந்தை பிறந்து உயிரிழந்தது. இதனால் சென்னமாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சென்னம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காததால் தான் சென்னம்மாள் மற்றும் அவரது குழந்தை உயிரிழந்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சென்னம்மாலின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.