பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஓகையூர் கிராமத்தில் சிவகுமார்-சுகந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுகந்திக்கு 3-வதாக கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு திடீரென பிரசவலி வந்துள்ளது. இவர் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் சுகந்திக்கு பிரசவம் பார்க்க மறுத்துள்ளனர். இதனையடுத்து சுகந்தியை ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது ஆம்புலன்ஸில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக மருத்துவ உதவியாளர் பி.சரவணன் சுகந்திக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு சுகந்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விசாரிக்கப்பட்டது. அதற்கு பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தது. ஆனால் அதற்குரிய உபகரணங்கள் எங்களிடம் இல்லாத காரணத்தால் நாங்கள் பிரசவம் பார்க்கவில்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறியது. மேலும் அப்பகுதி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.