சிகிச்சையின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் தௌசாவின் லால்செட் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையை அர்ச்சனா ஷர்மா மற்றும் அவரது கணவர் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு ஒரு பெண் பிரசவத்திற்காக வந்துள்ளார். ஆனால் பிரசவத்தின் போது அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இவர்கள் பிரசவம் பார்த்த மருத்துவர் அர்ச்சனாவை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்நிலையத்தில் அர்ச்சனா மீது கொலைவழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் மனமுடைந்த அர்ச்சனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவர் தற்கொலைக்கு முன்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதாவது என்னுடைய மரணத்திற்குப் பிறகு எனது கணவர் மற்றும் குழந்தைகளை யாரும் துன்புறுத்தாதீர்கள். நான் யாரையும் கொலை செய்யவில்லை. அந்தப் பெண் உயிரிழந்ததற்கு காரணம் அதிக ரத்தப்போக்கு ஆகும். இது இயற்கையான நிகழ்வு ஆகும்.
இதற்கு எந்த ஒரு மருத்துவரையும் குறை சொல்ல முடியாது என எழுதியிருந்தார். இந்த சம்பவத்திற்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் மருத்துவர் அர்ச்சனாவின் மீது கொலைவழக்குப் பதிவு செய்த அங்கேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.மேலும் காவல் கண்காணிப்பாளர் அணில் குமாரையும் பணி மாற்றம் செய்தார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.