பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிதிஷ்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மேடையை நோக்கி வெங்காயம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் 3 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதற் கட்ட தேர்தல் சென்ற அக்டோபர் 28ம் தேதி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இறுதி கட்ட தேர்தல் நவம்பர் ஏழாம் தேதி நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியின் இந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரசாரம் மிகத் தீவிரம் அடைந்துள்ளது.
மேலும் பல்வேறு நட்சத்திர பேச்சாளர்கள் தங்கள் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் பீகாரின் மதுபானி என்ற இடத்தில் நிதிஷ்குமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். வேலைவாய்ப்பு பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் நின்று கொண்டிருந்த மேடையை நோக்கி சிலர் வெங்காயம் வீசினர். உடனடியாக பாதுகாவலர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த அனைவரும் சேர்ந்து வெங்காயம் வீசிய நபரை பிடித்தனர். அப்போது அந்த நபரை விட்டுவிடுங்கள் அவர் மீது எந்த கவனத்தையும் செலுத்த வேண்டாம் என்று நிதீஷ் குமார் கூறியுள்ளார்.